Malaysia

கிந்தா இந்தியர் சங்க தலைவராக டத்தோ ஆர்.தங்கராஜா தேர்வு

ஈப்போ,அக்.29-
கிந்தா இந்தியர் சங்கத்தின் புதிய தலைவராக டத்தோ ஆர்.தங்கராஜா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இவ்வாண்டு 61 வது ஆண்டுப் பொதுக்கூட்டமும், தேர்தலும் இனிதாகவே நடந்தேறியது. இதில் அனைத்து பதவிகளும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

ஆனால், கெளரவ செயலாளர் பதவிக்கு ஆர்.முருகனும், த.மணியும் போட்டியிட்டனர். அவற்றில் முருகன் வெற்றிப் பெற்று கெளரவ செயலாளராக தேர்வானார்; த.மணி உதவி செயலாளராக அங்கீகரிக்கப்பட்டார் என்று கிந்தா இந்தியர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஆர்.தங்கராஜா மகிழ்ச்சியுடன் கூறினார்.

இச்சங்கத்தில் அதிகமான உறுப்பினர்களை சேர்க்க முற்பட வேண்டும். குறிப்பாக, இளைஞர்களை அதிக எண்ணிக்கையில் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் வாயிலாக இச்சங்கம் எதிர்வரும் காலங்களில் சிறப்பாகவும், புத்துணர்வுடன் செயல்படும் என்று அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

இச்சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அதிக அளவில் அங்கீகாரம், வாய்ப்புகள் மற்றும் உரிமையும் வழங்கப்படும். குறிப்பாக, கிந்தா இந்தியர் சங்க மண்டபத்தை பயன்படுத்தினால் கணிசமான கழிவு மற்றும் குடும்ப நிகழ்ச்சிகள் செய்வதற்கும் குறைவான செலவில் நிறைவான சேவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சங்கத்திற்கு சொந்தமான பழைய கட்ட மறுசீரமைப்பு பணிக்கு, விருந்து நிகழ்வை ஏற்பாடு செய்து அதன் வாயிலாக கிடைக்கப்பெற்ற நிதியை கொண்டு பழைய கட்டட சீரமைப்பு பணிகள் நிறைவு செய்யப்பட்டன.தற்போது அக்கட்டடம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தயாராகி விட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இனிவரும் காலங்களில் இச்சங்கம் அதிகமான விளையாட்டுத்துறை நிகழ்வுகள் மற்றும் பயிற்சி பட்டறைகளை இளைஞர்கள் அதிகமாக பங்கு பெற வாய்ப்புகள் செய்து தரப்படும். அதனைத் தவிர்த்து கல்வி அடிப்படையிலான நிகழ்வுகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

குறிப்பாக, கல்வியில் சிறப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அண்மையில் மடிக்கணினியை உதவித்தலைவர் எம்.செளந்திர பாண்டியனுடன் தாமும் இணைந்து 4 மாணவர்களுக்கு வழங்கியுள்ளதாக அவர் கோடிக் காட்டினார்.

கிந்தா இந்தியர் சங்கத்தின் புதிய நிர்வாகத்தினராக, தலைவர் டத்தோ ஆர்.தங்கராஜா, உதவித்தலைவர்களாக என்.லோகநாதன், எம்.செளந்திரபாண்டியன், டாக்டர் சேகர் நாராயணன், கெளரவ செயலாளராக ஆர்.முருகன், உதவி செயலாளராக த. மணி, பொருளாளராக கே. ஸ்டிபன் ராஜ், செயலவை உறுப்பினர்களாக இராமகிருஷ்ணன், தி.பிரான்சிஸ், பாலா, ஏ.சரஸ்வதி, ஆர்.கிருஷ்ணன், எஸ்.விக்டர், மகளிர் பிரிவு தலைவியாக எப்.ஷாமளா,கணக்காய்வாளராக எம்.விவேகானந்தா, எம்.இருதயநாதன் தேர்வாகினர்.

இம்முறை கிந்தா இந்தியர் சங்கத்தின் அறங்காவலர்களாக டத்தோ எம்.கருத்து, எஸ்.மலர்வண்ணன், ஆ.கோவிந்தராஜு மற்றும் சுந்தரம் டான்ஸ்ரீ ராஜு நியமனம் செய்யப்பட்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button