
மற்றொரு தீபாவளி வணிக சந்தை தளமாக இயோன் பாலிமை பேராக் அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது
ஈப்போ, அக்.29- இயோன் பாலிம் அடுத்தாண்டு முதல் தீபாவளி வணிக சந்தை தளமாக பேராக் மாநில அரசு அங்கீகரிக்கவுள்ளது. தற்போது ஈப்போ லிட்டல் இந்தியாவிற்கு அந்த அங்கீகாரம் உள்ளது. அதனைத் தொடர்ந்து இனி இவ்விரு தளங்களும் தீபாவளி சந்தை வணிக தளமாக செயல்படும் என்று இயோன் பாலிம் தீபாவளி வணிக சந்தை நிகழ்வை தொடக்கி வைத்தபோது பேராக் இந்திய சமூகநலத்துறை சுகாதாரம், மனிதவளம்,ஒற்றுமைத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்
இந்த வளாகத்தில் கடந்த 7 வருடங்களாக கலர்ஸ் ஓப் இந்தியா நிறுவனத்தார் மிகவும் சிறப்பாக தீபாவளி சந்தையை நடத்தி வருகின்றனர். அதன் தலைவர் குமரன் விஜயகுமார் மற்றும் அவரது சகோதரர்களுக்கு நன்றியையும், வாழ்த்தையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.

இங்கு பயனீட்டாளர்கள் கார்நிறுத்தும் வசதிகள் அதிகம் உண்டு. அத்துடன், குளிர்சாதன வசதியுடன் இங்குள்ள 80 வணிக முகப்பிடங்களில் தீபாவளிக்கு தேவையான ஆடைகள் மற்றும் இதர பொருட்களை இங்கே வாங்க முடியும். அதோடு, இங்கு பயனீட்டாளர்களின் பயன்பாட்டிற்கு கழிப்பறைகள் வசதியும் உண்டு. இங்கு அதிகமான உணவகங்கள் பல வகையான உணவுகளை சமைத்து விற்பனை செய்து வருகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
தறப்போது ஒவ்வொரு நாளும் மலேசிய கலைஞர்களும், தமிழக கலைஞர்களும் தங்கள் படைப்பை இந்த இயோன் பாலிமில் வழங்கி வருகின்றனர். தீபாவளி பொருட்கள் வாங்கவும், கலைஞர்களை காணவும் மக்கள் அதிக அளவில் இங்கு வருகின்றனர். குறிப்பாக, நடிகர் ஷாம் இன்று இங்கு வருகையளித்து அவருடைய இரசிகர்களை சந்தித்து வருவது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்த தீபாவளி சந்தையால் அதிகமான சிறு வியாபாரிகளுக்கு வாய்ப்புகள் குறிப்பாக பேராக் சிறு வியாபாரிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இங்குள்ள கடைகள் கணிசமான தொகைக்கு வாடகை விடப்பட்டுள்ளது. அத்துடன் இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மலிவாகவும், தரமாகவும் உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
ஒரு சில பொறாமை காரணமாக சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் புகார்கள் செய்து சிறுவியாபாரிகளின் வணிகத்தை பலவீனம் செய்ய முயற்சிக்கலாம். தற்போது இந்த தீபாவளி வணிக சந்தை பேராக் அராசாங்கத்தின் பார்வையின் கீழ் செயல்பட்டு வருகிறது. ஏதேனும் பிரச்சினைகள் அல்லது புகார்கள் இருக்குமானால் எங்களை தொடர்புக கொள்ளலாம் என்று அவர் அறிவுறுத்தினார்.



