
மலேசிய பத்திரிகை துறையில் ஓர் ஆளுமை பி.ஆர்.ராஜன்
கோலாலம்பூர்,நவ.25-
மலேசிய பத்திரிகை துறையில் தொடர்ந்து 48 ஆண்டுகள் பணியாற்றி வரும் ஒரே ஆளுமையாளர் 66 வயதான பி.ஆர்.ராஜன் என்று வர்ணிக்கப்பட்டுள்ளது.
இந்த நீண்ட நெடிய காலத்தில் இனம், சமயம், கல்வி உரிமைகளுக்கு இன்றளவும் துணிந்து எழுதி வருபவர் மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர்.ராஜன்.
‘சுடும் உண்மைகள்’ இவரின் அடையாளம். இவரின் கூர்மையான, வலிமைமிகு எழுத்துக்கள் பல சமுதாயப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உதவி இருக்கிறது. தலைவர்களின் அன்புக்குரியவராக இருப்பவர்.
மலேசிய இந்து சங்கத்திற்கு மிகப் பெரிய ஆதரவாகவும் பக்கப்பலமாகவும் இருப்பவர். மலேசிய இந்து சங்கத்தின் தீவிர பற்றாளர்.
தன்னுடைய இந்த 48 ஆண்டுகள் பயணத்தில் பல பத்திரிகையாளர்களையும் புகைப்பட கலைஞர்களையும் உருவாக்கிய பெருமை இவருக்கு உண்டு.
பல அரசியல்வாதிகளின் உயர்வுக்கு இவரின் எழுத்துக்கள் ஏணிப்படியாக இருந்து வருகிறது.
அனைவரிடமும் பாசத்துடனும் மரியாதையுடனும் பழகக் கூடிய பண்பாளர் பி.ஆர்.ராஜன். மலேசியத் தலைவர்களின் அபிமானத்தை பெற்றவர்.
பத்துமலை தமிழ்ப் பள்ளியில் கல்வியைத் தொடங்கிய பி.ஆர்.ராஜன், தமிழ்ப் பள்ளிகளின் மேன்மைக்கு இன்றளவும் பாடாற்றி கொண்டிருப்பவர்.
இரண்டு முறை மலேசிய பத்திரிகை கழகத்தின் சிறந்த பத்திரிகையாளர் விருதை வென்றவர். பல மேடைகளில் சிறப்பு விருதுகளை பெற்றவர்.
சரஸ்வதி ஆறுமுகம் அவர்களை தனது இல்லாளாக்கிக் கொண்ட இவருக்கு ரூபன், மித்திரன், ஸ்ரீராம் மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். முதல் இரு பிள்ளைகளும் பட்டதாரிகள். படித்த படிப்புக்கு ஏற்ற பணியில் இருக்கின்றனர். இளைய மகன் யுனிசெல் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி கற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



