Malaysia

பத்திரிகை துறையில் 35 ஆண்டுகளை நோக்கி பீடுநடை போடும் ஊடகவியலாளர் பத்திரிகை ஜாம்பவான் ஆதிகுமணன் போற்றிய பத்திரிகையாளர் குணாளன் மணியம்

கோலாலம்பூர்,டிச.2-

பத்திரிகை துறையில் இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தொழிலை துறந்தவர் குணாளன் மணியம். இருதொழில்களும் தமிழை சார்ந்ததுதான் என்றாலும் ஒரு பத்திரிகையாளனின் அடையாளம் வேறு என்ற அடிப்படையில் பத்திரிகை துறையில் தனது 19ஆவது வயதில் அதாவது இளம் வயதில் கால் பதித்தவர் குணாளன் மணியம்.

கடந்த 1990இல் தினமுரசு பத்திரிகையில் ஒரு நிருபராக பணிக்கு சேர்ந்தார். இந்த காலகட்டத்தில் திரு.தில்லை, திரு.பாலு, திரு.பி.எல்.ராஜன், திரு.விவேகானந்தன், திரு.குருசாமி, திரு.நாகசாமி உள்ளிட்டவர்கள் தினமுரசு பத்திரிகையில் பணியாற்றிய நேரம் அது.

அதன் பிறகு ஆதிகுமணன் தலைமையில் செயல்பட்ட மலேசிய நண்பன் பத்திரிகையில் ஒரு நிருபராக பணியை தொடர்ந்தார். பத்திரிகை மீது இருந்த பற்றுதலால் 35 ஆண்டுகள் நீடித்து சிறந்த ஒரு பத்திரிகையாளராக முத்திரை பதித்து வலம் வந்து கொண்டிருக்கிறார் குணாளன் மணியம்.

இந்த பத்திரிகை பயணத்தில் எல்லா நிலைகளிலும் அனுபவம் கொண்டுள்ளார். அரசியல்வாதி, பொதுமக்கள், கலைஞர்கள் என்று பலரோடு இணைந்து பயணித்த அனுபவம் இவருக்கு உண்டு. பத்திரிகை துறையில் நீண்ட பயணம் என்பது சாதாரண விஷயமல்ல. இந்த பயணத்தில் இவர் சந்தித்த சவால்கள் எண்ணில் அடங்கா…

இந்த பத்திரிகை பயணத்தில் மறைந்த ம.இ.கா தலைவர் துன் சாமிவேலு, முன்னாள் கெராக்கான் கட்சித்தலைவர் லிம் கெங் எய்க், முன்னாள் பினாங்கு முதலமைச்சர் தான்ஸ்ரீ கோ சூ கூன், டத்தோ கு.பத்மநாதன், டத்தோ எம்.ஜி.பண்டிதன் ஆகியோரை பேட்டி எடுத்த அனுபவம் குணாளனுக்கு உண்டு.
இந்த காலகட்டத்தில் பத்திரிகை ஜாம்பவான்கள் பலர் இருந்தனர். இவர்களில் ஆதிகுமணன், திரு.தில்லை, திரு.அக்கினி சுகுமார் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்த பத்திரிகைப் பயணத்தில் பாராட்டு, விருது என்பது ஒரு அங்கீகாரமாகும். அந்தவகையில் முன்னாள்
பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமது, முன்னாள் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அகமட் படாவி, முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் ஆகியோரின் திருக்கரங்களால் 15 முறை சிறந்த தமிழ்ப் பத்திரிகையாளருக்கான விருதுகள் பெற்றிருக்கிறார்.

இந்த சூழலில் விண்ணைத் தொடும் கோபுரத்தில் நட்சத்திரமாய் ஜொலிக்கும் தேசம் ஊடகத்தை தொடங்கி 15 ஆண்டுகளை எட்டிப் பிடித்துள்ளார். ஊடகத்துறை பயணம் என்பது மேடு பள்ளம் நிறைந்தது. கற்கள், மூட்கள் நிறைந்தது. இத்தகைய ஊடகத் துறையில் தனக்கென ஓர் இடத்தை பிடித்துக் கொண்டு 35 ஆண்டுகள் தொடர் பயணத்தை மேற்கொண்டு கடந்த 15 ஆண்டுகளில் தனிநபராக தேசம் ஊடகத்தை நடத்தி வெற்றிப்படிகளை எட்டிப் பிடித்துள்ளார் குணாளன் மணியம்.

தனிநபராக தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்துக் கொண்டு தமது பாணியில் பீடுநடை போட்டுக் கொண்டிருக்கும் குணாளன் மணியம் தலைமையில் உருவாக்கப்பட்டதுதான் இந்த தேசம் ஊடகம். மலேசிய நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்டு 31இல் 2009இல் ஒரு வார செய்திப் பத்திரிகையாக தொடங்கப்பட்டது.

தேசம் என்ற சொல் நாட்டுக்கு தொடர்புடைய பெயராக இருப்பதால் அது தொடங்கப்படும் நாளும் நாட்டுக்குத் தொடர்புடையதாக இருக்க வேண்டும் என்ற சிந்தனையில் நாட்டின் சுதந்திர தினமான ஆகஸ்டு 31இல் தேசம் முதல் பிரதி பத்திரிகை அச்சடிக்கப்பட்டது.

விண்ணைத் தொடும் இரட்டை கோபுரம் போல் 31.09.2009இல் தொடங்கப்பட்ட தேசம் இந்திய சமுதாயம் சார்ந்த பிரச்சினைகளை தாங்கிய, ஒரு சமுதாய சிந்தனை கொண்ட ஒரு பத்திரிகையாக திகழ்ந்ததால் எளிதில் மக்கள் மனதில் இடம்பிடித்திருந்தது.

இந்நிலையில் 2015 தேசம் மின்னியல் ஊடகம் செயல்படத் தொடங்கியது. இணையம் வழி செய்திகளை மக்களுக்கு கொண்டு சேர்த்து வந்த தேசம் ஊடகம் அரசியல்வாதிகள், இந்திய இளைஞர்கள், பொது இயக்கங்கள், மாணவர்கள், இந்திய சமுதாய மக்கள் என்று பலரது பாராட்டைப் பெற்றிருந்தது.

அதன்பிறகு 2017இல் தேசம் இணைய ஊடகம் DESAM TV MALAYSIA எனும் பெயரில் YOUTUBE CHANNEL அலையொளி தொலைக்காட்சியாக தொடங்கப்பட்டது. இதன்வழி அரசியல், சமுதாயம், ஆன்மீகம், விளையாட்டு என்று பல்வேறு செய்திகளை காணொளி செய்தியாக உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு சேர்த்து வருகிறது. இத்தனை சாதனைகளை 15 ஆண்டுகளில் தனிநபராக சாதித்த ஒரு சாதனையாளராக தேசம் ஊடகம் திகழ்கிறது என்றால் அதுமிகையில்லை.

ஒரு வார செய்தி பத்திரிகையாக தொடங்கப்பட்ட தேசம், இணைய ஊடகமாகவும் தொலைக்காட்சி ஊடகமாகவும் முன்னேற்றமடைந்து செயல்படுவதற்கு அதன் தோற்றுநர் குணாளன் மணியம் முக்கியப் பங்காற்றியுள்ளார். இந்த வெற்றி நாயகனுக்கு சக்தி இல்லையேல் சிவன் இல்லை என்பது போல இவரது மனைவி திருமதி சரஸ்வதி பெருமாள் என்றும் துணை நிற்கிறார். அதோடு நின்றுவிடாமல் மகள் ரேவதி குணாளன் செய்தி வாசிப்பாளராகவும் மகன் ஹரி ஸ்ரீநிவாஸ் குணாளன் எடிட்டர் வேலையையும், வீடியோகிராப்பர் வேலையையும் மேற்கொண்டு வருகிறார். இது மட்டுமல்லாமல் மூத்த மகன் முகேஸ்வரன் ஒரு சமையல் கலை வல்லுநராக வெளிநாட்டில் பணியாற்றிய போதிலும் தனது பங்காக இன்றளவும் ஆலோசனை வழங்கி வருகிறார். இப்படியாக
இன்று மொத்த குடும்பமும் தேசம் ஊடகத்தை இணைந்து நடத்தி வருகிறது.

இந்த வெற்றிச் சிகரத்தை தொடுவதற்கு 15 ஆண்டுகள் உழைத்திருக்கும் குணாளன் மணியம், உண்மை, உழைப்பு, உயர்வு எனும் தாரக மந்திரத்தை கொண்டு செயல்பட்டதால் வெற்றிச் சிகரம் தொட்டுள்ளார்.

இந்த ஊடகப் பயணத்தில் தாம் சந்தித்த பிரச்சினைகள், சவால்களை எதிர்கொண்டு, தடைகல்லையே படிகல்லாக்கி சாதனை மனிதராய் திகழ்ந்து வரும் குணாளன் மணியம், அன்று தேசம் இதழை தன் தோளில் தனிநபராக சுமந்ததன் விளைவாகவே இன்று தேசம் ஊடகம் 15ஆம் ஆண்டை நோக்கி நகர்ந்து இந்த மலேசிய தேசத்தையே வியக்க வைத்துள்ளார்.

இன்றைக்கு தேசம் ஊடகம் அடைந்துள்ள வளர்ச்சியும் கடந்து வந்த பாதைகளும் எளிதல்ல. நெருப்பாற்றில் நீந்தியது போல் ஓர் உணர்வு. அத்தகைய சவால்களை தேசம் ஊடகம் சந்தித்து வந்துள்ளது. வெற்றி என்பது ஒரு போதை. அதை என்றும் தலைக்கணமாக ஏற்றியது இல்லை குணாளன் மணியம்.

தேசம் ஊடகத்தின் இத்தனை சாதனைக்கும் சொந்தக்காரர் குணாளன் மணியம் என்றால் அதுமிகையில்லை.
தேசம் என்றால் குணாளன் மணியம், குணாளன் மணியம் என்றால் தேசம் என்று சொல்லும் அளவுக்கு மக்கள் மனதில் நீங்காத இடத்தைப் பிடித்துள்ளார். தேசம் ஊடகம் மலேசிய மக்கள் மட்டுமன்றி உலக மக்களின் கவனத்தையும் ஈர்க்கும் நிலைக்கு கொண்டு சென்றுள்ள குணாளன் மணியம் தேசத்தை உலக மக்கள் நேசம் கொள்ளச் செய்துள்ளார் என்பதுதான் உண்மை. “மலேசியத் தமிழர்கள், உலகத் தமிழர்களின் சுவாசம்” என்று சொல்லும் நிலைக்கு வந்துள்ள தேசம் ஊடகம் 15ஆம் ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஆகஸ்டு 31இல் கொண்டாடியது.

இவரின் பத்திரிகை சேவைக்கு அங்கீகாரமாக சிலாங்கூர் சுல்தான், சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அவர்களிடமிருந்து PJK எனும் விருது பெற்றுள்ளார். குணாளன் மணியம் மேலும் பல சாதனைகள் படைக்கவும் புதிய சிந்தனைகளோடு புதிய சிறகுகளோடு புதிய இலக்கை தேடி அடியெடுத்து வைத்து ஊடகப் பயணத்தை தொடர்ந்து சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்.
வாழ்க தேசம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button