
தமிழ்லென்ஸ் காளிதாசன் இளங்கோவன் சிறந்த ஆன்லைன் ஊடகவியலாளர் விருதை வென்றார்
கோலாலம்பூர் டிச.18-
தேசம் ஊடகத்தின் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழாவில் தமிழ்லென்ஸ் நிருபர் காளிதாசன் இளங்கோவன் சிறந்த ஆன்லைன் ஊடகவியலாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
தேசம் அனைத்துலக சாதனையாளர்கள் விருதளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை மாஸ்ஷா பல்கலைக்கழகத்தில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது. தேசம் ஊடகத்தின் உரிமையாளர் குணாளன் மணியம் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விருந்தளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் சிறந்த ஆன்லைன் ஊடகவியலாளர் விருது தமிழ் லென்ஸ் இணையத்தளத்தின் நிருபர் காளிதாசன் இளங்கோவனுக்கு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. தமிழ் நாட்டில் புகழ்பெற்ற மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களிடம் இருந்து காளிதாசன் இந்த விருதை பெற்றுக் கொண்டார்.
மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் முதல் நிலை உதவித் தலைவராக இருந்து வரும் காளிதாசன் இளங்கோவன் 15 ஆண்டுகளுக்கு மேலாக ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார்.
துடிப்பு மற்றும் ஆற்றல்மிக்க ஊடகவியலாளராக விளங்கும் காளிதாசன் அவர்களுக்கு மலேசிய தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் அதன் தலைவர் முத்தமிழ் மன்னன் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.



