
தேசம் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழா தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்
பண்டார் சௌஜானா புத்ரா,டிச.18-
தேசம் ஊடகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான அனைத்துலக சாதனையாளர்கள் விருதளிப்பு விழாவில் தமிழ்நாட்டின் மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் அவர்களுக்கு தேசம் ஊடகம் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவித்துள்ளது.
தமிழ்நாட்டின் காவல்துறை அலசி தேடிக் கொண்டிருந்த சந்தன கடத்தல் வீரப்பனை அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் தனிமனிதனாக சென்று சந்தித்து பேச்சு நடத்திய நக்கீரன் கோபால் ஒரு திராணிமிக்க பத்திரிகையாளராவார். அரசியல் யவாதிகளை தன் பேனா முனை கொண்டு துலக்கும் நக்கீரன் கோபால் அவர்களுக்கு தேசம் ஊடகம் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி மகுடம் சூட்டியுள்ளது.
இந்த வாழ்நாள் சாதனையாளர் விருதை மனிதநேய மாமணி ரத்னவள்ளி அம்மையார் மற்றும் குணாளன் மணியம் ஆகியோரிடம் இருந்து பெற்றுக் கொண்ட நக்கீரன் கோபால், விருது வழங்க பெரிய மனது வேண்டும் என்றும் அது குணாளன் மணியத்திடம் நிறையவே இருப்பதாக தெரிவித்து தேசம் ஊடகத்திற்கு நன்றி கூறினார்.
நக்கீரன் கோபால் அவர்களுக்கு ஏற்கெனவே சென்னையில் நடைபெற்ற தேசம் விருது விழாவில் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட நிலையில் இரண்டாவது முறையாக ஓராண்டுக்குப் பிறகு மீண்டும் “வாழ்நாள் சாதனையாளர்” விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தேசம் ஊடகத்தின் 15ஆம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு டிசம்பர் 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு மாஹ்சா பல்கலைக்கழகத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்ற 7ஆம் ஆண்டு விருதளிப்பு விழாவில் கௌரவிக்கப்பட்ட தமிழ்நாட்டின் முக்கிய மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் என்பது குறிப்பிடத்தக்கது.



