
125 ஆண்டு நிறைவை கொண்டாடும் பேராக் தைப்பிங் செயிண்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி
தைப்பிங்,பிப்.1-
நாட்டில் மிகவும் பழைமையான தமிழ்ப்பள்ளி எனும் வரலாற்றைக் கொண்டுள்ள பேராக், தைப்பிங் செயிண்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி 125ஆம் வெற்றியை 2025 ஆண்டு கொண்டாடுகிறது.
தைப்பிங் வட்டாரத்தில் மிகவும் பழமையான தமிழ்ப்பள்ளி எனும் வரலாற்றை கொண்டுள்ள செயிண்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி மருத்துவம், சட்டம், பொறியியல் உள்ளிட்ட பல துறைகளில் சாதனையாளர்களாக திகழும் பல மாணவர்களை உருவாக்கியுள்ளது.
அந்த வகையில் வட்டார சமூக மேம்பாட்டுக்கு தொடக்க புள்ளியாய் செயல்பட்டு வரும் செயிண்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளியை கொண்டாடும் வகையில் 125ஆம் ஆண்டு கொண்டாட்டம் நடத்தப்படவுள்ளதாக பள்ளி வாரியக்குழுவை சேர்ந்த ரவீந்திரன் ராமையா கூறினார்.
இந்த செயிண்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி 1900இல் தொடங்கப்பட்டது தற்போது 125ஆம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுகிறது. தமிழ்ப்பள்ளி வாரியமும் பெற்றோர் ஆசிரியர் சங்கமும. இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த விழா கடந்த ஜனவரி 11இல் தைப்பிங் பேரங்காடியில் தொடங்கி 2025ஆம் ஆண்டு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடு செய்து வருவதாக ரவீந்திரன் தெரிவித்தார்.
இதில் முக்கிய நிகழ்வாக பொங்கல் விழா பிப்ரவரி 23ஆம் தேதி நடைபெறும். இதில் 125 பொங்கல் பானைகள் வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. கோலம் 125 போட்டி தமிழ் வருடப்பிற்கு நடத்தப்படும். மேலும் கல்வி கருத்தரங்கு, பெருநடை, கல்வெட்டு 125, மருத்துவ முகாம் 125 மற்றும் விருந்து இசை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக ரவீந்திரன் தெரிவித்தார்.
தமிழ்ப்பள்ளி நமது அடையாளம்
தமிழ்ப்பள்ளியை கொண்டாடுவோம் கருப்பொருளில் கொண்டாடடப்படும் 125ஆம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னாள் மாணவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு 125ஆம் ஆண்டு வெற்றியை கொண்டாடுமாறு ரவீந்திரன் ராமையா அழைப்பு விடுத்துள்ளார்.



