Malaysia

இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை அமைச்சரவையில் இன உணர்வோடு யார் பேசுவார்?

இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை அமைச்சரவையில் இன உணர்வோடு யார் பேசுவார்?

டிஜிட்டல் துறை அமைச்சர் கோவிந்த் சிங் டியோ இந்திய சமுதாயத்திற்கு குரல் கொடுப்பாரா?

SAYA TIDAK TAKUT KEPADA SIAPA SIAPAPUN

துன் சாமிவேலு போன்று யாரும் நாடாளுமன்றத்தில் கர்ஜிக்க முடியாது

தேசம் அதிரடி அலசல்  குணாளன் மணியம்

கோலாலம்பூர், ஜன.2- ஒரு காலத்தில் தேசிய முன்னனி சரியில்லை. அதன் உறுப்புக் கட்சிகளாக இருந்த அம்னோ, ம.இ.கா, மசீச உள்ளிட்ட இதர கட்சிகள் எதுவும் சரியில்லை என்று புகார் மேல் புகார் கூறப்பட்டது. இவர்கள் 60 ஆண்டுகள் என்ன செய்தார்கள் என்ற கேள்வி ஒருபுறம். மலாய்க்காரர்கள், சீனர்கள், இந்தியர்கள் என்று அனைவரும் தங்கள் கட்சிகள் மீது ஆத்திரத்தை கொட்டித் தீர்த்து விட்டனர். மாற்றம் வேண்டி போராடினார்கள். மாற்றம் வந்தது? எல்லாம் சரியானதா?

கடந்த 2008இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா படாவி தலைமையிலான தேசிய முன்னனி 140 நாடாளுமன்ற இடங்களை பிடித்து ஆட்சி அமைத்திருந்தது. எதிர்கட்சிகள் 80 இடங்களை கைப்பற்றின.

இந்நிலையில் 2013இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஒரு பயங்கர சுனாமி ஏற்பட்டது. துன் மகாதீர்-அன்வார் இப்ராஹிம் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கைகோர்த்து ஆட்சியை பிடித்தனர். துன் மகாதீர் பிரதமர் ஆனார். வான் அஸிசா துணைப்பிரதமர் ஆனார். இந்திய சமுதாயத்திற்கு ஒன்றும் நடக்கவில்லை.

இதற்கிடையில் தான்ஸ்ரீ முஹிடின் யாசின்-துன் மகாதீர் கூட்டு சேர்ந்த பெர்சத்து உடைந்தது. பிரதமராக ஆட்சியில் அமர்ந்த துன் மகாதீர் அன்வாரை பிரதமராக்கி விட்டு சென்று விடுவார் என்பது வாக்குறுதி. அதனையும் செய்யவில்லை.

நாட்டில் உள்ள மக்களுக்கு குறிப்பாக இந்திய மக்களுக்கு ஏதாவது ஒரு மாற்றம் ஏற்பட்டுமா என்ற தோரணையில் சமுதாய மக்கள் எதிர்பார்ப்போடு தங்கள் ஆதரவினை தொடர்ந்து தெரிவித்து வந்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இந்திய சமுதாய மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

துன் அப்துல்லா படாவிக்கு பிறகு பிரதமர் பதவியை அலங்கரித்த டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கை

இந்த தருணத்தில் நம்மால் கண்டிப்பாக மறக்க முடியாது. டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக். ஆம், இவர் பிரதமராக இருந்தது இந்தியர்களுக்கு ஒரு பொற்காலம் என்றுதான் செல்ல வேண்டும். இவர் காலத்தில்தான் SEED தோன்றியது. அது தற்போது மித்ராவாக உருவெடுத்துள்ளது. இவர் காலத்தில்தான் ஆலயங்கள் கவனிக்கப்பட்டன. இவர் காலத்தில்தான் தமிழ்ப்பள்ளிகளுக்கு மானியங்கள் வாரி வாரி வழங்கப்பட்டன. தமிழ்ப்பள்ளிகளுக்கு நஜீப் காலத்தில் 800 மில்லியன் வரை வழங்கப்பட்டன. தைப்பூசம் என்றால் அஞ்சாமல், தவறாமல் பத்துமலை தைப்பூசத்திற்கு வருகை தரும் ஒரே பிரதமர். கேட்பார் பேச்சை கேட்காமல் சுயமாக முடிவெடுக்கும் திராணியுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப். இந்திய சமுதாயம் கைகூப்பி வணங்க வேண்டிய பிரதமர் நஜீப் என்றால் அது மிகையில்லை.

அப்படி இப்படி என்று வீழ்த்தி விட்டார்கள் தேர்தலில். அவரும் ஆண்மைனாக தோல்வியை ஒப்புக் கொண்டு விலகினார். ஆனால், மக்கள் சந்திப்பை கைவிடவில்லை. இந்நிலையில் வழக்கு விசாரணை என்ற போர்வையில் சிறைக்கு அனுப்பப்பட்டார். சந்திரன் கெட்டது அந்த பெண்ணாலே, இந்த இந்திரன் கெட்டதும் அந்த பெண்ணாலே…

கடந்த 2018 பொதுத்தேர்தலுக்குப் முன்னர் தான்ஸ்ரீ முஹிடின் யாசின் பிரதமர் பதவியை அடைந்தார். அவரும் பிரதமர் பதவியில் தாக்கு பிடிக்க முடியவில்லை. அதன்பிறகு டத்தோஸ்ரீ இஸமாயில் சப்ரி யாக்கோப் பிரதமர் பதவியை ஏற்றார். இவர் காலத்தில் யார் பிரதமர் என்று கேட்கும் அளவுக்கு அவரது செயல்பாடுகள் அமைந்திருந்தன என்பது மக்கள் கருத்து. துன் மகாதீர் காலத்தில் எல்லாம் இழந்தோம். துன் படாவி காலத்தில் பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை. டத்தோஸ்ரீ நஜீப் காலம் பொற்காலம். மீண்டும் மகாதீர். எல்லாம் கெட்டது. முஹிடின் யாசின், இஸ்மாயில் சப்ரி காலத்திலும் ஒன்றும் நடக்கவில்லை.

எல்லா சூழ்நிலைகளையும் கடந்து 2022இல் நாட்டின் 15ஆவது பொதுத்தேர்தல் வந்தது. கடந்த 2008, 2013 மற்றும் 2018 ஆகிய மூன்று தேர்தல் பிரச்சாரங்களின் போது எம்.ஜி.ஆர் போல் மேடையில் தோன்றி மக்களின் குறைகளை தீர்ப்பேன் என்று சூளுரைத்த டத்தோஸ்ரீ அன்வார்-தான் முஹிடின் யாசின் இருவருக்கும் இடையில் பலத்த போட்டி நிலவிய நிலையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் பேரரசர் துவான்கு அப்துல்லா டத்தோஸ்ரீ அன்வாரை பிரதமராக அறிவித்தார்.

டத்தோஸ்ரீ அன்வார் வந்து விட்டார். இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகள் ஓரளவுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு தீரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியது. இந்திய மக்கள் என்னதான் ஏமாந்தார்கள் என்பதை நான் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டிய அவசியமில்லை. இந்த ஓராண்டு கால ஆட்சியில் என்னென்னமோ நடந்து விட்டது.

இந்தியர்கள் மனதை புண்படுத்திய இரண்டு விஷயங்கள் நடந்து விட்டன. ஓன்று ஒரு இந்துவை பிரதமர் அன்வார் மதம் மாற்றியது. இரண்டு கெல்லிங் என்று கூறி விட்டு புத்தகத்தில் எழுதப்பட்டிருந்தது என்று கூறியது. இந்த இரண்டு சம்பவம் மிக அண்மையில் இந்தியர்களை புண்படுத்திய விவகாரமாகும்.

இந்த சூழலில் மூன்றாவதாக நிகழ்ந்த ஒரு சம்பவம் மேலும் ஒரு படி மேலே போய் இந்தியர்களை புண்படுத்தி விட்டது அமைச்சரவை மாற்றம்… அமைச்சரவை மாற்றம் தொடர்பில் கட்சி அடிப்படையில் சில முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தாலும் சமூகம் சார்ந்தும் அந்த முடிவுகள் இருக்க வேண்டும். அமைச்சரவை மாற்றம் என்பது அரசாங்கத்திற்கும் ஒரு சமூகத்திற்கும் மாற்றத்தை கொண்டு வரக்கூடியதாக இருக்க வேண்டுமே தவிர கட்சிக்கும் தனிநபருக்கும் மட்டும் முன்னேற்றத்தை கொண்டு வரக்கூடியதாக இருக்கக் கூடாது.

இந்த அமைச்சரவையில் அமைச்சராக கோபிந்த் சிங் டியோ நியமிக்கப்பட்டார். துணையமைச்சர்களாக குலசேகரன், டத்தோ ரமணன், சரஸ்வதி கந்தசாமி ஆகியோர் நியமனம் பெற்றனர். ஏற்கெனவே இருந்த மனிதவள அமைச்சர் சிவக்குமார் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இது பிரதமர் அன்வாரின் தனிப்பட்ட உரிமை. ஆனால், ஒரு இந்திய அமைச்சரை நியமனம் செய்திருக்கலாம். அல்லது குலசேகரனுக்கு அமைச்சர் பதவி வழங்கியிருக்கலாம். அவருக்கு பிச்சை போடுவது போல் துணையமைச்சர் பதவி. கோபிந்த் சிங்கிற்கு அமைச்சர் பதவி.

அப்படியானால் யார் இந்திய சமுதாயத்தின் சார்பில் அமைச்சரவையில் பேசுவது? இந்திய சமுதாயத்தின் உரிமைகளை யார் நிலைநிறுத்துவது? இந்திய சமுதாயத்தின் பிரச்சினைகளை யார் அமைச்சரவைக்கு கொண்டு செல்வது?

கோபிந்த் சிங் டியோ பேசுவார் என்று ஒரு சிலர் கருத்துரைத்துள்ளனர்.

இந்திய சமுதாய பிரச்சினைகளை உணர்வோடு பேசுவாரா கோபிந்த் சிங்? செந்தூல் ஸ்ரீ மகா காளியம்மன் ஆலய பிரச்சினையும் சமுதாய பிரச்சினைதான். இதற்கு ஏன் கோபிந்த் சிங் வாய் திறக்கவில்லை? நான் அனைத்து இனங்களுக்கும் அமைச்சர் என்ற நிலையில் அமைதியாய் இருந்து விட்டாரா? கோபிந்த் சிங் இந்திய சமுதாயத்திற்கு குரல் கொடுப்பார் என்பது என்ன நிச்சயம்?

இந்த தருணத்தில்தான் சாதனைத் தலைவர், தானைத் தலைவர் துன் சாமிவேலு நினைவுக்கு வருகிறார். SAYA TIDAK TAKUT SIAPA SIAPAPUN என்று ஒரு காலத்தில் அவர் நாடாளுமன்றத்தில் சிங்கம் போல கர்ஜித்திருந்தது இன்றளவும் யாராலும் மறக்க முடியாது.

துன் சாமிவேலுக்கு இருந்த இந்த இன உணர்வு இனி யாருக்கு வரும்? ம.இ.கா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் மற்றும் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் இருவரும் எல்லா நேரங்களிலும் இந்திய சமுதாயத்திற்காக குரல் எழுப்பி வருகின்றனர் என்பது பலரும் அறிந்த உண்மை. இதனை யாரும் இல்லை என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது குறித்து பேச பலருக்கு வாய் வலிக்கும். இந்திய அமைச்சர் இல்லை. நடப்பு அரசாங்கத்தில் இருக்கும் இந்திய தலைவர்களில் யாராவது குரல் கொடுத்தார்கள்? இல்லை. பயம்…பயம்…பயம்…தனக்கு கிடைத்த துணையமைச்சர் பதவியையும் ஒருவர் தரம் தாழ்ந்து ஏற்றுக் கொண்டார். இவர்கள் அனைவருக்கும் பிரதமர் அன்வாருக்கு ஜால்ரா அடிக்கவே நேரம் சரியாக இருக்கிறது.

நீங்கள் எல்லாம் எந்த சூழ்நிலையிலும் தேசிய முன்னனி என்ன செய்தது? அம்னோ என்ன செய்தது? ம.இ.கா என்ன செய்தது? மசீச என்ன செய்தது என்று கேட்கவே கூடாது. அப்படி இந்த கேள்வி எழுந்தால் நீங்கள் என்ன செய்தீர்கள் என்ற கேள்வி எழும். நாங்கள் இப்போதுதான் வந்தோம். என்ன செய்ய முடியும் என்ற கேள்வியெல்லாம் பழைய புராணம். ஓராண்டில் கிழித்து விடுவோம். டோல் கட்டணத்தை அகற்றுவோம். இலவச கல்வி வழங்குவோம். இதை செய்வோம்…அதை செய்வோம் என்று சொன்னது நீங்கள்…இன்று நீங்கள் என்ன செய்கிறீர்கள். சிந்தித்துப் பாருங்கள்…

 

அதிரடி அலசல் மீண்டும் வரும்….

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button