
Malaysia
Trending
மலேசிய இந்தியர்கள் விசுவாசம் அற்றவர்களா?
துன் மகாதீர் கூற்று அடிப்படையற்றது அரசியல் ஆய்வாளர் டத்தோ மு.பெரியசாமி கருத்து
கோலாலம்பூர், ஜன.27-
மலேசிய இந்தியர்கள் விசுவாசம் அற்றவர்கள் எனத் துன் டாக்டர் மகாதீரின் குற்றச்சாட்டு நாட்டிலே பல்வேறு சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
அதோடு அரசியல் கருத்து வேறுபாடின்றி அனைத்து இந்தியர்களின் மனத்தையும் புண்படுத்தியுள்ளது. துன் மகாதீரின் குற்றச்சாட்டை மடானி அரசாங்கம் அறிவித்துள்ள 3R (சமயம், இனம்,பேரரசர்) சட்டத்தின் கீழ் போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தியர்கள் வெகுண்டெழுந்துள்ளனர். இது தொடர்பாக ஆங்காங்கே போலீஸ் புகாரும் செய்து வருகின்றனர். துன் மகாதீரின் குற்றச்சாட்டில் எவ்வித ஆதாரமும் இல்லையென நாடறிந்த அரசியல் ஆய்வாளர் டத்தோ மு.பெரியசாமி கருத்துரைக்கின்றார் .
இந்நாட்டைப் பொருத்த மட்டில் இந்தியர்கள் மிகவும் விசுவாசமாக இருந்திருக்கின்றனர் என்பதை இந்நாட்டின் வரலாற்றுக் குறிப்புகள் காட்டுகின்றன. இந்நாட்டிற்கு இந்தியர்களைப் பல்வேறு தொழிற் துறைகளுக்கு ஆங்கிலேயர்களின் காலனித்துவ ஆட்சி கொண்டுவந்தது. அப்போதைய காலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டவர்களாகிய இந்தியர்கள் காடு மேடான இந்நாட்டை வளமாக்கினர், சாலைகள் அமைத்தனர், பாலங்களைக் கட்டினர், இரயில் தண்டவாளங்களை அமைத்தனர், இரப்பர் தோட்டங்களை உருவாக்கினர். இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி மலாயா என்ற இந்நாட்டை ஒரு பொருளாதார வளமிக்க நாடாக உருவாக்கினர் என்பது வரலாறு. அக்காலத்தில் இந்நாட்டின் பாதுகாப்பை அச்சுறுத்திய கம்யூனிஸ்டுகளின் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடி உயிர்த் தியாகமும் செய்துள்ளனர்.
அடுத்து, மலாய் சமூகத்தினருடன் இணைந்து நாட்டின் சுதந்திரத்துக்கும் வித்திட்டனர். நாடு சுதந்திரம் அடைவதற்கு அடிப்படையாக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டம் பல்வேறு இனம் சார்பான உரிமைகளைப் பாதுகாக்க வகை செய்வதற்கு மற்ற இனங்களோடு இணக்கம் கண்டனர். அதில் குறிப்பாக ஒவ்வொரு இனமும் தங்களது இன அடையாளம், சமயம், கலை கலாச்சாரத்தைத் தொடர்ந்து நிலைத்திருக்க அரசியலமைப்புச் சட்டத்தில் வழியமைத்தனர். இதன் அடிப்படையில்தான் தங்களின் இன அடையாளங்களைப் பாதுகாத்து வருகின்றனர் எனக் கூறுகின்றார் டத்தோ பெரியசாமி.
இந்நாட்டிலே இந்தியர்கள் தங்களுடைய இன அடையாளத்தையும், மொழியையும் பேணிக் காப்பதற்கு அரசியல் அமைப்புச் சட்டம் அரணாக விளங்குகிறது. அஃதோடு இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் குடியேறிய இந்தியர் அந்நாட்டு மக்களோடு ஒருங்கிணைதல் (asimilasi) என்ற அடிப்படையில் இல்லாமல் தனித்துவ அடையாளமாக ஒருங்கிணைந்து (integrasi ), மற்ற இனத்தவரோடு கூட்டுறவு அடிப்படையில் வாழ்ந்து வருகின்றனர்.
இதன் அடிப்படையில்தான் இந்தியர்கள் தங்களது மொழி, சமய, கலை கலாச்சாரத்தைப் பின்பற்றி இன்று வரை மற்ற இனத்தவரோடு சுமூகமாக வாழ்ந்து வருகின்றனர். நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் வாழ்ந்து வரும் இந்தியர்களை நாட்டிற்கு விசுவாசம் அற்றவர்கள் எனக் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல.
இந்தியர்களைப் பொருத்தமட்டில் இந்நாட்டில் விசுவாசமாக இருக்கின்றனர் என்பதை ஆணித்தரமாகக் கூறலாம். உதாரணத்திற்கு 1963-ல் மலேசிய உருவாக்கத்தின்போது அதற்குத் தடையாக இருந்தார் இந்தோனேசியாவின் அதிபர் சுகர்னோ. அதோடு மட்டும் நின்றுவிடாமல் இந்தோனேசிய படையைக் கொண்டு நாட்டைக் கைப்பற்ற முயற்சியும் செய்தார்.
அப்போது இந்நாட்டு இந்தியர்கள் குறிப்பாகத் தோட்டப்புறங்களில் வாழ்ந்தவர்கள் இந்தோனேசியாவின் ஆக்கிரமிப்பை எதிர்த்து இரவு பகலாக காவல் புரிந்தனர். இந்தோனேசிய தலைநகரத்தில் மலேசியத் தூதரகத்தினுள் அத்துமீறி நுழைந்த இந்தோனேசிய இளைஞர்கள் கொடிக் கம்பத்திலிருந்த மலேசியக் கொடியை இறக்கி எரித்தனர்.
இந்தோனேசியா முழுவதும் மலேசியாவின் உருவாக்கத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்நிகழ்ச்சியை வெறுமனே வேடிக்கை பார்த்தார்களில்லை நம் இந்தியர்கள். இருபத்து மூன்றே வயதான தமிழ் இளைஞன் இந்தோனேசிய தூதரகத்தின் மீது ஏறி இந்தோனேசியக் கொடியை இறக்கி மலேசியக் கொடியை ஏற்றினார் என்பதை துன் மகாதீர் அறிவாரா? அவர் வேறு யாருமல்ல. ம.இ.காவின் தலைவர் துன் சாமிவேலுதான்.
இந்நிகழ்ச்சி இந்தியர்களிடையே நாட்டுப் பற்று எந்த அளவுக்கு வேரூன்றி இருந்தது என்பதையே காட்டுகிறது. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் அல்லவா?
32 ஆண்டுகள் ம.இ.காவின் தலைவராக தொண்டாற்றிய துன் சாமிவேலு இந்நாட்டில் இந்தியர்கள் நாட்டுக்கு விசுவாசமாக இருக்க வேண்டுமென்ற ம.இ.காவின் சிந்தனையை தொடர்ந்து விதைத்து வந்தார்.
இந்த அடிச்சுவட்டைப் பின்பற்றி இப்போதை ம.இ.காவின் தேசியத் தலைவர் தான்ஶ்ரீ SA விக்னேஸ்வரன் தேசப்பற்றை உரமூட்டி வருகிறார் என்பதை துன் மகாதீர் அறிவாரா? மேலும் இந்நாட்டில் இந்தியர்களின் பங்களிப்பைப் பற்றி அறிய தான்ஶ்ரீ SA விக்னேஸ்வரன் அவர்களால் வெளியீடு கண்ட ‘PERJUANGAN POLITIK KOMUNITI INDIA’ எனும் நூலை வாசித்து அறியலாம்.
இந்நாட்டு இந்தியர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள், விசுவாசமானவர்கள் என்பதையும் எவ்வகையிலும் மற்ற இனத்தவரின் நாட்டு விசுவாசத்திற்குக் குறைந்தவர்கள் இல்லையென்பதையும் துன் மகாதீர் உட்பட அனைத்து மக்களும் அறிய வேண்டும்.
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல் -குறள் 314
எனும் உயரிய பண்பாட்டுப் பின்னணியில் வாழ்கின்ற இந்நாட்டு இந்தியர்கள் இதனை மறந்து மன்னித்து ஒற்றுமைக்கு கேடு நிகழா வண்ணம் ம.இ.கா தேசிய தலைவர் தான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் சொன்னதுபோல் அடுத்த நடவடிக்கையைத் தொடர்ந்து செய்வோம் எனக் கருத்துரைத்துள்ளார் அரசியல் ஆய்வாளர் டத்தோ மு. பெரியசாமி.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



