Malaysia

அலகு குத்துவது, அருள் இறங்குவது, உருமி மேளம் உள்ளிட்ட இந்து சமய நம்பிக்கையை இழிவாகப் பேசுவதா? ஏழு நாட்களில் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டநடவடிக்கை உருமிமேள இசைக்கலைஞர்கள் சங்கம் எச்சரிக்கை

கோலாலம்பூர், பிப்.26-

அலகு குத்துவது, அருள் இறங்குவது, உருமி மேளம் உள்ளிட்ட இந்து சமய நம்பிக்கையை சமூக வலைத்தளத்தில் இழிவாகப் பேசிய மூன்று இந்திய இளைஞர்கள் ஏழு நாட்களில் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவிருப்பதாக மலேசிய உருமி மேளம் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சிவா கூறினார்.

இந்த மூன்று இளைஞர்களும் இந்து சமயத்தையும் கலாச்சாரத்தையும் இழிவுப்படுத்தி பேசியுள்ளனர். இந்த மூன்று இளைஞர்களில்
ஒருவரை நேரடியாக அழைத்து மன்னிப்பு கேட்க சொன்னோம்.
ஆனால், அந்த இளைஞர் நையாண்டித்தனமாக மன்னிப்பு கேட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால் சட்டநடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தலைநகர் மெட்ராஸ் காபேயில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சிவா அவ்வாறு தெரிவித்தார்.

இந்த சம்பவத்தை மலேசிய உருமி மேளம் இசைக் கலைஞர்கள் சங்கம் கடுமையாக கருதுகிறது. இத்தகைய சம்பவங்கள் எதிர்காலத்தில் நடக்கக்கூடாது என்று அச்சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் சமூக ஊடகத்தில் மூன்று இளைஞர்கள் உருமிமேள இசையை கேவலப்படுத்தும் வகையில் இழிவாகப் பேசியுள்ளனர்.
இது தொடர்பில் நாடு தழுவிய அளவில் 70க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளதாக சிவா சொன்னார்.

இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக வழக்கு நோட்டீஸ் வரும் செவ்வாய்க்கிழமை அனுப்பி வைக்கப்படும் என்று மலேசிய உருமி மேளம் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் தினேஷ் முத்தல் தெரிவித்தார்.

நமது இனத்தைச் சேர்ந்தவர்களே நமது இசையை கேவலப்படுத்தும் வகையில் பேசலாமா? இச்செயல் கண்டிக்கத்தக்கது.
இத்தகைய சமயத்தையும் கலாச்சாரத்தையும் இழிவுபடுத்தும் செயலை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று தினேஷ் குறிப்பிட்டுள்ளார்.

அந்த மூன்று இளைஞர்களும் வழக்கறிஞர் நோட்டீஸ் கிடைத்த ஏழு நாட்களில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்கத் தவறினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தினேஷ் சொன்னார்.

இதனிடையே சமயத்தையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இழிவுபடுத்தும் நபர்களின் ஆணவத்தை அடக்க இந்த சட்ட நடவடிக்கை அவசியமாகும் என்று .
புரட்சி சட்ட நடவடிக்கை குழுவின் தலைவர் உமாகாந்தன் கூறினார்.

நம் இனத்தவர்களே நம் மதத்தையும் கலாச்சாரத்தையும் கேவலப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. சம்பந்தப்பட்டவர்கள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். பத்து ஆண்டுகளுக்கு மேலாக உருமி மேள இசைக்கலைஞர்கள் சங்கம் உருமிமேள இசையை பேணி காத்து வருகிறது என்று மலேசிய உருமி மேளம் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் ஆலோசகர் கவிமாறன் தெரிவித்தார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button