
மலேசிய பாத்தேக் தென் கிழக்காசியாவில் பிரசித்திப் பெறவேண்டும் , டத்தோ ஶ்ரீ டாக்டர் ஶ்ரீ சுகுந்தன் வழியுறுத்து
கோலாலம்பூர், மார்ச் – 19-
நாட்டின் பாரம்பரிய ஆடைகளில் ஒன்றான மலேசியாவின் பாத்தேக், ஆசியா கண்டத்தை கடந்து உலகளவில் பிரசித்தி பெற வேண்டும் என்ற அடிப்படையில் பாத்தேக் ஐக்கோன் மலேசியா 2024 ஆடை அணிவகுப்பு மிக விமர்சையாக ஆரா டாமான்சாரா பெட்டாலிங் ஜெயாவில் அமைந்துள்ள ஈவோல்ஷ் கான்சாப்ட் பேரங்காடியில் நடத்தப்பட்டது.
ஹரி பாத்தேக் மலேசியா தினத்தை முன்னிட்டு அண்மையில் ஹேரிஇண்டர்நேசனல் டெலன்ஸ் நிறுவனம் பாத்தேக் ஐக்கோன் மலேசியா 2024 நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தியது.
அப்பேரங்காடியின் செண்டர் கோர்ட்டில் நடைபெற்ற பாத்தேக் ஐக்கோன் மலேசியா 2024 நிகழ்வை, மஜ்லிஸ் கெபுடையாஆன் டான் வாரிசான் நூசாந்தாராவின் தேசியத் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன் சிறப்பு பிரமுகராக தலைமையேற்று அதிகாரப்பூர்வமாக நிகழ்ச்சியினை தொடக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியினை வரவேற்று பேசிய அவர் ,இதுபோன்ற நிகழ்ச்சிகள் நமது கலை கலாச்சாரத்தை மேலும் பிரபலமாக்க வழியுறுத்தலாகவும் ,
அதே சமயம் அடுத்த கட்ட நகர்வுக்கான முன்னோட்டமாகவும் மலேசியா சுற்றுலாத்துறை மேலும் வலுவடைவதற்கும் இது ஊன்றுகோலாக திகழ்கிறது என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன் புகழாரம் சூட்டினார்.
இந்நிகழ்ச்சிக்கு முத்தாய்ப்பாக விளங்கிய ஹேரி இண்டர்நேசனல் டெலன்ஸ் இயக்குநர் டாக்டர் பரணிகுமார் ஹேரி அவர்களின் நாட்டுப்பற்று உணர்வு மிகையில்லை என்று அவர் கூறினார்.
பாத்தேக் ஐக்கோன் மலேசியா 2024 நிகழ்ச்சி மலேசிய மடானி அரசாங்க கொள்கையின் உள்ளடக்கமாகத் திகழ்வதோடு ,பாத்தேக் உடையணிவது மலேசியரின் உணர்வைப் பிரதிபலிக்கிறது. அவ்வகையில் பாத்தேக் ஆடையின் சிறப்பு உலகெங்கும் பரவ வேண்டும் என்று ஹேரி இண்டர்நேசனல் டெலன்ஸ் நிறுவனத்தின் மெயின் பேஜ் இதழுக்கு வழங்கிய வாழ்த்துரையில் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன் குறிப்பிட்டார்.
எங்கள் அன்புக்குரிய பிரதமர் என்று மக்களால் போற்றப்பட்ட மலேசியாவின் 10-வது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாட்டின் உயர்வுக்கான திட்டங்களும் முற்போக்கான சிந்தனையும் வெற்றிப்படியை தொடும் உச்சத்தை நோக்கிக் கொண்டிருக்கையில்,பிரதமரின் மடானி திட்டங்களில் அரசாங்கம் கவனம் செலுத்திக் கொண்டிருக்கக் கூடிய இலக்கவியல் மையம், முறையான செயல் ஆட்சி நிலை நிறுத்துதல், சக்தி மாற்றுதல் மற்றும் லஞ்ச ஊழலை அழிக்கும் முயற்சிக்கு நாம் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன் கேட்டுக் கொண்டார்.
பிரதமர் அமல்படுத்தி வரும் ஒவ்வொரு திட்டத்தின் பின்னணிலும் துணைப் பிரதமரும், தேசிய முன்னணி தலைவருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் அகமது ஜாகிட் ஹாமிடி முக்கிய ஆணிவேராகத் திகழ்ந்து வருகிறார். இவ்வாறான பண்பு நாட்டின் மேம்பாட்டில் இவ்விரு தலைவர்களும் கொண்டுள்ள கடப்பாட்டைப் பறை சாற்றுகிறது என்று வாழ்த்தி பாத்தேக் ஐக்கோன் மலேசியா 2024 நிகழ்வில் தமது அதிகாரப்பூர்வமான உரை நிகழ்த்துகையில் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன் குறிப்பிட்டார்.
இதனிடையே, நாட்டின் புதிய பேரரசராக அண்மையில் பதவியேற்ற மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹோம் சுல்தான் இஸ்கண்டார் மற்றும் பேரரசியார் ராஜா ஜாரித் சோஃபியா பிந்தி அல்மர்ஹோம் சுல்தான் இட்ரிஸ் ஷா தம்பதியருக்கு தமது வாழ்த்துகளையும் இந்நிகழ்ச்சி வாயிலாக அவர் தெரிவித்துக் கொண்டார்.
தொடர்ச்சியாக, ஒவ்வொரு வியாழக்கிழமையும் அரசு ஊழியர்கள் பாத்தேக் தினத்தை அனுசரிப்பது, பாத்தேக் ஆடை அணிவதை ஊக்குவிப்பதோடு, பாத்தேக் மலாயு கலை வடிவ ஆடை மலேசியாவின் சிறப்பை தென்கிழக்காசியா வரை விரிக்க வகை செய்யும் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன் மேலும் வலியுறுத்தினார்.
கேட்வாக் பாத்தேக் ஆடை அணி வகுப்பில் கலந்து கொண்ட பாத்தேக் ஐக்கோன் மலேசியா 2024 லின் 60 பங்கேற்பாளர்களுக்கு சோழன் அனைத்துலக சாதனை புத்தக அமைப்பு நற்சான்றிதழ் மூலமாக அங்கீகரித்தது. இந்நிகழ்வு சோழன் அனைத்துலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்று வரலாறு படைத்தது என்பது இதன் மற்றொரு சிறப்பாகும் .
இவ்வமைப்பின் மலேசியாவிற்கான பொதுத்தலைவர் ஜேசுதாஸ் சின்னப்பன், தலைவர் ராமசாமி கிருஷ்ணன் மற்றும் செயலாளர் திலகமீனா சத்தியா ஆகியோரும் நிகழ்வின் முக்கிய அம்சத்தின் பங்களிப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
பாத்தேக் ஐக்கோன் மலேசியா 2024 ஆடை அலங்கார அணி வகுப்பில் கலந்து கொண்ட பங்கேற்பாளர்களுக்கு சோழன் அனைத்துலக சாதனை புத்தக சான்றிதழை எடுத்து வழங்கியதோடு ஹேரி இண்டர்நேசனல் டெலன்ஸின் எம்பசெடர் விருதைப் பெற்றவர்களுக்கு டத்தோ ஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன் தமது வாழ்த்துகளையும் பாராட்டையும் தெரிவித்ததை அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரையும் மகிழ்வித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



