
கல்வி பிரச்சினை, மக்கள் பிரச்சினை என்றால் ம.இ.கா மட்டுமே உதவி செய்கிறது ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள இந்திய எம்.பிக்கள் என்ன செய்கிறார்கள்? பூச்சோங் முரளி கொந்தளிப்பு
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோலாலம்பூர், ஏப்.11-
நாட்டில் மக்கள் பிரச்சினை, கல்வி பிரச்சினை என்றால் ம.இ.கா மட்டுமே உதவி செய்ய முன் வருகிறது. மற்றவர்கள் அனைவரும் வாய்மூடி மௌனமாகி விடுகிறார்கள் என்று பூச்சோங் முரளி சாடியுள்ளார்.
ஒற்றுமை அரசாங்கத்தில் உள்ள இந்திய அமைச்சர், துணையமைச்சர், எம்.பிக்கள் அனைவரும் புண்ணியமில்லாதவர்கள் என்று மருத்துவ மாணவி வினோஷா தொடர்பான “கேட்டது 15 ஆயிரம் வெள்ளி, MIED கொடுத்தது 65 ஆயிரம் வெள்ளி” என்ற செய்தியை மேற்கோள் காட்டி பூச்சோங் முரளி அவ்வாறு கொந்தளித்துள்ளார்.
மக்கள் பிரச்சினை, கல்வி பிரச்சினை என்று வரும் போது ம.இ.கா மட்டுமே உதவி வருகிறது. சிலர் சொல்வார்கள், MIEDக்கு அரசாங்கம் வழங்கிய பணம் அது என்று. அது கல்வி உபகார சம்பளம் வழங்கும் பணம். ஆனால், ம.இ.காவுக்கு கொடுக்க மனம் இருக்கும் போது இந்திய எம்பிக்களுக்கு ஏன் மனம் இல்லை என்று பூச்சோங் முரளி ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
ரஷ்யாவில் நான்காம் ஆண்டாக மருத்துவம் படித்து வரும் மாணவி வினோஷாவுக்கு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமி ஒரு 5 ஆயிரம் வெள்ளி வழங்கியிருக்கலாம். ஆனால், கைவிரித்து விட்டார். எம்பிக்களாக இருக்கும் கணபதிராவ், ராயர், யுவனேஸ்வரன், குலசேகரன், சிவக்குமார் உள்ளிட்ட எம்பிக்கள் யாரும் அந்த மருத்தவ மாணவிக்கு உதவில்லை என்று பூச்சோங் முரளி சாடினார்.
இந்திய எம்பிக்கள் அனைவரும் ஆளுக்கு ஆயிரம் வெள்ளி அல்லது இரண்டாயிரம் வெள்ளி வசூல் செய்து வழங்கியிருக்கலாம். அதைச் செய்யவில்லை. இவர்கள் ஏன் இப்படி கஞ்சதனமாக வயிறு வளர்க்கிறார்கள்? உங்களிடம் பண்ம் இல்லையா? உங்களுக்கு கொடுக்க மனம் இல்லை. அவ்வளவுதான். அந்த மனம் ம.இ.காவுக்கு இருக்கிறது. ஒவ்வொரு முறையும் இது நடக்கிறது. கல்வி பிரச்சினை, மக்கள் பிரச்சினை வரும் போதெல்லாம் ம.இ.காதான் முதல் ஆளாக உதவி செய்கிறது என்று பூச்சோங் முரளி பாராட்டினார்.
மாணவி வினோஷாவுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேஸ்வரன் மட்டுமே 3 ஆயிரம் வெள்ளி உதவி வழங்கியுள்ளார். மாணவியின் தாயார் பிரபாகரனை நேரில் சந்தித்த போது விமான டிக்கெட் செலவுக்கு 3 ஆயிரம் வெள்ளி வழங்கியுள்ளார்.
ரஷ்ய மாணவி வினோஷா விவகாரம் தொடர்பில் தேசம் ஊடகம் வெளியிட்ட ஒரு செய்தியை தமது டிக்டாக் காணொளியில் பதவிவேற்றி அனைத்து இந்திய எம்பிக்களையும் விலாசு விலாசி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



