
சரஸ்வதி கந்தசாமியின் உதவியாளர் அனுப்பிய வக்கீல் நோட்டீஸ் மன்னிப்பு கேட்க போவதில்லை; வழக்கை சந்திக்க தயார் தமிழ் லென்ஸ் வெற்றி விக்டர் திட்டவட்டம்
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
கோல குபு பாரு, மே 6-
ஒரு இந்திய மாதுவிடம் அநாகரிகமாக பேசியதாக தமிழ்லென்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பில் தேசிய ஒற்றுமை துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமியின் உதவியாளர் கேரன் கஸ்தூரியிடம் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என்றும் வழக்கை சந்திக்க தயாராக இருப்பதாகவும் அதன் ஆசிரியர் வெற்றி விக்டர் சூளுரைத்துள்ளார்.
உங்கள் உதவியாளர் சம்பந்தப்பட்ட மாதுவிடம் கூறிய விவகாரத்தை தமிழ் லென்ஸ் இணைய ஊடகத்தில் வெளியிட்டோம். அதனை அவரது உதவியாளர் மறுத்துள்ளார். இது தொடர்பில் என்னிடம் பேசியிருக்கலாம். சம்பந்தப்பட்ட மாதுவுக்கு உதவி செய்திருக்கலாம். அதை விடுத்து காவல்துறையில் புகார் செய்துள்ளது அறிவுடமையாகாது என்று வெற்றி விக்டர் தெரிவித்தார்.
நான் வெளியிட்ட செய்தியால் MIED வழி 65 ஆயிரம் வெள்ளி பெறப்பட்டுள்ளது. ஆனால், 50 வெள்ளி கூட வழங்காத சரஸ்வதி கந்தசாமி தனிச்சையாக செய்தியாளர் சந்திப்பை நடத்தி தற்போது சம்பந்தப்பட்ட மாதுவுக்கும் எனக்கும் கேரன் மூலம் வழக்கறிஞர் கடிதம் வழங்கியுள்ளார். ஊடகங்களை இப்படி அடக்குவது சரியா? முறையா? என்று வெற்றி விக்டர் கேள்வி எழுப்பினார்.
“இன்றைய அரசாங்கம் கொடுங்கோலனாக இருக்க வேண்டாம் என்றும் ஊடக சுதந்திரத்தை தடுக்க முயற்சிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்” என்று தேசம் ஊடகத்திடம் வெற்றி விக்டர் கூறினார்.
ஊடகவியலாளர்கள் கொண்ட துணை அமைச்சரின் வாட்ஸ்அப் குழுவிலிருந்து தாம் நீக்கப்பட்டதாகவும், அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பிற்கு தாம் அழைக்கப்படவில்லை என்றும் வெற்றி விக்டர் சொன்னார்.
இந்த விவகாரம் தொடர்பில் பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் வெற்றி விக்டர் குறிப்பிட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் கோல குபு பாருவில் பிரதமர் துறையின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கனை சந்தித்ததாகவும் விரைவில் கடிதம் ஒன்றை வழங்கவிருப்பதாகவும் வெற்றி விக்டர் சொன்னார்.
தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சர் சரஸ்வதி கந்தசாமியின் உதவியாளர் கேரன் கஸ்தூரி வெற்றி விக்டருக்கு அனுப்பிய வழக்கறிஞர் நோட்டீசில் தமிழ் லென்ஸ் இணைய ஊடகத்தின் ஆசிரியர் வெற்றி விக்டர் அவதூறு செய்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் தனது குழந்தையின் கல்விக்காக நிதி உதவி கேட்ட தாயிடம் சரஸ்வதியின் உதவியாளர் அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகக் கூறி வெற்றி விக்டர் அவரது தமிழ் லென்ஸ் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தார்.
அந்த செய்தியை வெற்றி விக்டர் வாபஸ் பெறுவதோடு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை அவர் முன்வைத்திருந்தார்.
“துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமியின் உதவியாளருக்கு எதிரான புகாருக்கு 48 மணி நேரத்திற்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தனக்கு நோட்டீஸ் வந்ததாக வெற்றி விக்டர் தேசம் ஊடகத்திடம் தெரிவித்தார்.
கடந்த மார்ச் 12ஆம் தேதி சரஸ்வதி கந்தசாமி நடத்திய செய்தியாளர் சந்திப்பில் 15,000ஆம் வெள்ளி நிதி உதவி கேட்ட தாயை தனது ஊழியர்கள் தவறாக நடத்தினார்கள் என்ற கூற்றை சரஸ்வதி மறுத்திருந்தார். இது தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சி என்றும் இது தொடர்பில் காவல்துறையில் புகார் செய்ய உள்ளதாகவும் சரஸ்வதி கந்தசாமி அந்த செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



