
மெட்ரிகுலேஷன் கிடைக்காத 30 மாணவர்களுக்கு டத்தோ நெல்சன் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் படிக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளார்
கோலாலம்பூர்,ஜூன் 30-
மெட்ரிகுலேஷன் வாய்ப்பு கிடைக்காத 30 இந்திய மாணவர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் மருத்துவ துறையில் கல்வி பயில ம.இ.கா கல்விக்குழுத் தலைவர் டத்தோ நெல்சன் வாய்ப்பு ஏற்படுத்தித் தந்துள்ளார்.
30 மாணவர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்றிருந்தும், அவர்கள் மனு செய்த மருத்துவத் துறையில் கல்வி பயில்வதற்கு வாய்ப்பு வழங்காமல், மருந்தகம், பயோமெட்ரிக் எனப்படும் மருத்துவ உயிரியல் அறிவியல் போன்ற துறைகளில் வாய்ப்பு வழங்குவது எந்த வகையில் நியாயம் என கேள்வி எழுப்பியிருந்த டத்தோ நெல்சன் அம்மாணவர்களுக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு வழங்கினார்.
இந்த மாணவர்கள் அனைவரும் மருத்துவ துறையில் உயர் கல்வியை மேற்கொள்ள வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் தேக்கி வைத்து கடுமையாக பாடுபட்டு மருத்துவத் துறையில் கல்வி பயில அதற்கான முழு தகுதியை கொண்டுள்ளதால் அவர்களுக்கு ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் வாய்ப்பு வழங்கியதாக டத்தோ நெல்சன் தெரிவித்தார்.
ஒவ்வொரு ஆண்டும் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் விரும்பும் துறைகளில் கல்வி பயில்வதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவது சரியான முடிவாக இல்லை என்பதால் ம.இ.கா கல்விக்குழு தலைவர் என்ற முறையில் வாய்ப்பு வழங்கி வருவதாக டத்தோ நெல்சன் தெரிவித்தார்.



