
கட்சித் தலைமைத்துவத்தோடு இணைந்து பணியாற்றக்கூடிய தலைவர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்
தேசம் அரசியல் களம் குணாளன் மணியம்
கோலாலம்பூர்,ஜூலை 5-
தாய்க்கட்சியான ம.இ.கா.வில் ஒற்றுமை ஜனநாயகம் மட்டுமன்றி கட்சி தலைமைத்துவத்தோடு இணைந்து பணியாற்றக்கூடிய தலைவர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று என்பது கட்சித் தலைமைத்துவத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ம.இ.கா தற்போது பலம் வாய்ந்த கட்சியாக உருமாற்றம் கண்டு வரும் நிலையில் அதற்கேற்ற தலைவர்களை அடையாளம் காணும் நிலை கட்சிக்கு இருக்கிறது. யார் வேண்டுமானாலும் போட்டி போடலாம் என்பது ஜனநாயகம். அதேநேரத்தில் இன்னும் வந்தால் பணி சிறப்பாக இருக்கும் என்பது எதிர்பார்ப்பு. இந்த சூழலில் ம.இ.கா தேர்தல் சூடு பிடித்துள்ளது.
ம.இ.காவின் தேசியத் தலைவராக மூன்றாவது தவணையாக
தான்ஶ்ரீ ச. விக்னேஸ்வரன் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2018 முதல் ம.இ.கா.வின் தலைமை பொறுப்பை ஏற்ற தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் அன்று முதல் இன்று வரை டத்தோ ஶ்ரீ சரவணனை துணைத்தலைவராக வைத்துக் கொண்டுள்ளார்.
டத்தோ சரவணன் எல்லா காலக்கட்டத்திலும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரனுக்கு துணையாக இருந்துள்ளார்.
ம.இ.கா தேர்தல் ஜூன் 6ஆம் தேதி நாடு தழுவிய நிலையில் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு கிளைகளை சார்ந்தவர்கள் வாக்களிப்பார்கள். தனக்கு துணையாக ஒரு துணைத் தலைவர் வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவித்து டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களை தனக்கு துணையாக்கிக் கொண்டுள்ளார் கட்சித் தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன்.
அதேநேரத்தில் தலைவருக்கு உதவியாக மூன்று உதவித் தலைவர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், போட்டியிடுவதோ நால்வர். தனக்கு உதவியாக டத்தோ நெல்சன் வேண்டும் என்று வெளிப்படையாக கூறி விட்ட தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் மற்ற இருவரை அடையாளம் கண்டு விட்டார் என்பது திண்ணம்.
கடந்த 1997 இல் முதல் முறையாக போட்டியிட்டு பெரும் வெற்றியடைந்த செனட்டர் டத்தோ நெல்சன் ரெங்கநாதன் இளைஞர் பிரிவுத் தலைவராக பொறுப்பேற்றார். ம.இ.காவுக்கு இவர் ஆற்றிய தன்னலமற்ற சேவைகளையும் தற்போது நாடாளுமன்றத்தில் அவரின் கருத்துரைக்கும் திறனையும், கல்வியாற்றலையும், காலத்திற்கு ஏற்ப சிந்தித்து திட்டமிடுதலையும் கருத்தில் கொண்டு ம.இ.கா. பேராளர்கள் உதவித் தலைவர் போட்டியில் அவர் அநேக வாக்குகளைப் பெற்று வெற்றியடைவார் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் பலரும் கருத்துரைக்கின்றனர்.
இதில் வெற்றி வாகை சூடும் அந்த மூவர் யார்?
இதில் மத்திய செயலவைக்கு 21 பேர் தேவைப்படுகின்றனர்.ஆனால் போட்டியிடுவதோ 45 பேர். இந்த 21 பேரையும் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தேர்வு செய்திருக்க வாய்ப்பு உள்ளது. இதில் டத்தோ ஆனந்தன், அண்ட்ரூ டேவிட், விண்சண்ட், டத்தோ எஸ்.என்.முத்து, ஏ.கே.ராமலிங்கம், தினாளன், தமிழ்வாணன், சதாசிவம், வே.குணாளன், டத்தோ முனியாண்டி, டத்தோ கமலநாதன், டத்தோ ஆர்.டி.ராஜா, ரவின், நாவலன் உள்ளிட்ட சிலரை குறிப்பிட்டுச் சொல்லலாம். யார் அந்த 21 பேர்?
இவர்களைத் தவிர்த்து ஒவ்வொரு மாநிலத்தையும் பிரதிநிதிக்க பத்து பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ம.இ.கா. தான்ஶ்ரீ விக்னேஸ்வரன் தலைமையின் கீழ் தாய்க்கட்சி எனும் புகழுடன் மீண்டும் எழுச்சி பெற பேராளர்கள் இணைந்து பணியாற்றக்கூடிய தலைவர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பது அனைவரது எதிர்பார்ப்பு.



