
தொலைக்காட்சி சீரியல்களில் காட்டப்படும் தற்கொலை காட்சிகளை தணிக்கை செய்யுங்கள் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வேண்டுகோள்
பினாங்கு,ஜூலை 12-
பகிடிவதை மற்றும் தற்கொலை பற்றி அலசி ஆராயும் நாம், தொலைக்காட்சியில் தினந்தோறும் ஒளியேறிவரும் தமிழ் தொடர் நாடகங்களில் அவ்வப்போது தற்கொலை மற்றும் பகிடிவதை காட்சிகள் காட்டப்படுவதை தணிக்கை செய்ய வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
பெரும்பாலான தொடர் நாடகங்களில், தற்கொலை செய்வது எப்படி என்று பகிரங்கமாக காட்டப்படுகின்றது என்று அதன் கல்வி அதிகாரி என்.வி.சுப்பாராவ் கூறினார்.
அனைவராலும் விரும்பி பார்க்கப்படும் இந்த தொடர் நாடகங்களில் ஏமாற்றம், விரக்தி, தோல்வி ஆகியவற்றை எதிர்நோக்குபவர்கள் நாடுகின்ற தீர்வு தற்கொலைதான்.
இவ்வாறு தமிழ் சீரியல்களில் காட்டப்படுகின்றது. இந்த காட்சிகள் உடனடியாக தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று என்.வி.சுப்பாராவ் கேட்டுக் கொண்டார்.
அதே நேரத்தில் தோல்வியடையும் இளைஞர்கள் மது அருந்தும் காட்சிகளும் அதிக அளவு காட்டபடுகின்றது.
இதுவும் நிறுத்தப்பட வேண்டும் என்றார் சுப்பாராவ்.
தற்கொலை காட்சிகளை இந்த தொடர் நாடகங்கள் பல வழிகளில் சித்தரிக்கின்றன. இந்த தொடர் நாடகங்களை விரும்பி பார்கின்றவர்கள், தங்களுக்கு ஏற்படும் தோல்விகளுக்கு, தற்கொலைதான் சிறந்த தீர்வு என முடிவு செய்து விடுகின்றார்கள் என சுப்பாராவ் தெரிவித்தார்.
தைரியம், தன்னம்பிக்கை போன்ற எதிர்த்து போராடும் காட்சிகளை காட்டாமல் தற்கொலைதான் தீர்வு என காட்டப்படுவதால் பலர் தவறான முடிவை எடுத்து விடுகின்றனர்.
இப்படிப்பட்ட காட்சிகள் முதலில் தணிக்கைப்செய்யப்பட வேண்டும். அறவே ஒளிபரப்ப கூடாது.
அதே நேரத்தில் பெண்களை இழிவுபடுத்தும் அல்லது மதிப்பு தராத காட்சிகளும் தணிக்கை செய்யப்பட வேண்டும் என்று சுப்பாராவ் வலியுறுத்தினார்.



