
காற்பந்து போட்டிகள் வாயிலாக சிறந்த விளையாட்டாளர்களை உருவாக்க முடியும் பேராக் இந்திய காற்பந்து சங்கத்திற்கு கூடுதல் மானியம் வழங்கப்படும்
ஈப்போ, ஜுலை 14-
பேராக் மாநில தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான 14 ஆண்டாக காற்பந்து போட்டி நடைபெற்றது. இம்முறை 32 குழுக்கள் ஆண்கள் பிரிவிலும், 19 குழுக்கள் பெண்கள் பிரிவிலும் பங்கேற்றன. ஆண்கள் பிரிவு சாம்பியனாக பெங்களான் பாரு தமிழ்ப்பள்ளியும், பெண்கள் பிரிவில் பெருவாஸ் தமிழ்ப்பள்ளியும் சாம்பியனாக வெற்றிப் பெற்றன.


இக்குழவின் சிறந்த அடைவு நிலைக்கு
பேராக் மனிதவளம், சுகாதாரம், ஒற்றுமை, இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் பாராட்டையும் வாழ்த்தையும் தெரவித்தார்
இந்நாட்டின் விளையாட்டுத்துறையில் அதிகமான சிறந்த விளையாட்டாளர்களை இதுபோன்ற போட்டி விளையாட்டு வாயிலாக உருவாக்க முடியும். அதன் பொருட்டு பேராக் மாநில அரசாங்கம் பேராக் இந்திய காற்பந்து சங்கம் மற்றும் அதன் தலைவர் டத்தோ அமாலுடின் இஸ்மாயிலுக்கு முழுமையான ஆதரவு வழங்கி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
பேராக் மாநிலத்தில் 134 தமிழ்ப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அதாவது தமிழ்நாட்டிற்கு பிறகு அதிகமான தமிழ்ப்பள்ளிகள் கொண்ட மாநிலமாக பேராக் மாநிலம் திகழ்கிறது.
ஆகையால், அடுத்தாண்டு இப்போட்டிக்கு சுமார் 100 தமிழ்ப்பள்ளிகள் கலந்துக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டியில் பள்ளிகள் இலவசமாக கலந்துக்கொள்வதோடு, காலையுணவு, மதியயுணவு, தண்ணீர் இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன், போக்குவரத்து செலவு தொகையும் வழங்கப்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
இவ்வாண்டில் தேசிய அளவிலான மீபா போட்டி பினாங்கில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு இன்று வெற்றிப்பெற்ற முதல்நிலை 4 குழுக்களும், பெண்கள் பிரிவில் இரு முதல்நிலை வெற்றிப் பெற்ற குழுக்கள் பேராக் மாநிலத்தை பிரதிநிதிக்கும்.
இந்த அனைத்து குழுக்களின் போக்குவரத்து மற்றும் உணவு, தங்குமிடம் போன்ற அனைத்து செலவுகளை பேராக் மாநில அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும் என்று அ.சிவநேசன் மகிழ்ச்சியுடன் கூறினார்.
இவ்வாண்டு நடைபெற்ற காற்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் பெங்களான் பாரு தமிழ்ப்பள்ளி முதல்நிலை, இரண்டாவதாக துன் சம்பந்தன் தெலுக் இந்தான், மூன்றாவதாக முகிம் புண்டுட் மற்றும் நான்காவதாக பாரதி தமிழ்ப்பள்ளியாகும். அதோடு, பெண்கள் பிரிவில் சாம்பியனாக பெருவாஸ் தமிழ்ப்பள்ளி, இரண்டாவதாக வால்புரோக் தமிழ்ப்பள்ளி, ஆயர்தாவார் மூன்றாவதாகவும், நான்காவதாக கோத்தா பாரு தமிழ்ப்பள்ளியும் வென்றன.
இம்முறை சிறந்த விளையாட்டாளராக ஜே. வசிகரன் பெங்களான் பாரு தமிழ்ப்பள்ளி, சிறந்த கோல்கீப்பராக ஜி.சச்சிதானந்தன் துன்சம்பந்தன் தமிழ்ப்பள்ளி, ஜே.ஜிவனேஸ் பாரதி தமிழ்ப்பள்ளி தேர்வு செய்யப்பட்டனர்.
பெண்கள் பிரிவில் சிறந்த விளையாட்டாளராக பெருவாஸ் தமிழ்ப்பள்ளி மாணவி சுவேத்தா, சிறந்த கோல்கீப்பர் ஆய் இங் வால்புரோக் மற்றும் நம்பிக்கை நடசத்திரமாக வனிஷா கோத்தா பாரு தமிழ்ப்பள்ளி மாணவி தேர்வு செய்யப்பட்டனர்.
வெற்றிப்பெற்ற குழுவினருக்கு பிவி நகைக்கடை உரிமையாளர் அமான்ஷா டத்தோ அமாலுடின் பரிசுகள் எடுத்து வழங்கினார். அவருடன் டத்தின் சர்மிளா டத்தோ அமாலுடின் மற்றும் டத்தோ அமாலுடின் இஸ்மாயில் ஆகிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் சிறப்பு பிரமுகராக மீபா தலைவர் அன்பா, காற்பந்து சகாப்தம் டத்தோ எம்.கருத்து மற்றும் காவல்துறையின் உயர்நிலை அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர்.



