Malaysia

5 கோடி வெள்ளியில் அமானா இக்தியாரின் “பெண்” திட்டம் 4 மாதங்களில் 1,229 பெண் தொழில்முனைவோருக்கு 88 லட்சம் ரிங்கிட் கடனுதவி டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் தகவல்

பண்டார் ஸ்ரீ டாமன்சாரா, ஜூலை 19-
வணிகத் துறையில் இந்தியப் பெண்களை முன்னேற்றும் இலக்கோடு அறிமுகப்படுத்தப்பட்ட 5 கோடி வெள்ளி மதிப்பிலான அமானா இக்தியார் மலேசியா (ஏ.ஐ.எம்) “பெண்”(P.E.N.N) திட்டத்தின் வாயிலாக, இதுவரை 1,229 பெண் தொழில்முனைவோருக்கு 88 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டுள்ளதாக தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன் கூறினார்.

இந்த எண்ணிக்கையானது, ஏ.ஐ.எம்-இன் “பெண்” திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட ஏப்ரல் மாதம் 13ஆம் தேதி முதல் ஜூலை மாதம் 17ஆம் தேதி வரைக்குமான குறிப்புகளாகும் என்று சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் குறிப்பிட்டார்.

இந்த “பெண்” திட்டத்திற்கு நாடு முழுவதிலிருந்து அமோக வரவேற்பு கிடைத்து வருவதாகவும், இதனைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 10,200 இந்தியப் பெண்கள் நன்மையடைவர் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார்.

இன்று காலை அமானா இக்தியார் மலேசியா தலைமையகத்தில் இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு ஏ.ஐ.எம். “பெண்” கடனுதவிக்கான காசோலையை எடுத்து வழங்கிய டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

இந்த “பெண்” திட்டத்தின் வாயிலாக அதிகமான கடனுதவி பெற்ற மாநிலமாக பேரா மாநிலம் விளங்குகிறது. இதுவரை 33 லட்சம் ரிங்கிட் கடனுதவி அம்மாநில இந்தியப் பெண் தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சிலாங்கூர் – கூட்டரசுப் பிரதேசம் 18 லட்சம் ரிங்கிட், நெகிரி செம்பிலான், மலாக்கா ஆகிய மாநிலங்களுக்கு 13 லட்சம் ரிங்கிட் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் வழி இன்னும் அதிகமான இந்தியப் பெண்கள் சிறு குறு வியாபாரங்களில் ஈடுபடுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், இளையோரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி வியாபாரத் துறையில் முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிமுகப்படுத்தியுள்ள மலேசிய மடானி கொள்கையின் அடிப்படையில், இந்தியப் பெண்களை முன்னேற்றுவதற்கும், உருமாற்றுவதற்கும் ஏதுவாக இந்த ஏ.ஐ.எம். “பெண்” திட்டம் செயல்பாட்டில் உள்ளதாக அவர் கோடிகாட்டினார்.

இன்றைய காசோலை வழங்கும் நிகழ்ச்சியில் ஏ.ஐ.எம். வாரியத் தலைவர் டத்தோஸ்ரீ சையட் உசேன் சையட் ஜுனிட், ஏ.ஐ..எம். தலைமை இயக்குநர் ஷாமிர் அஸிஸ், துணையமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணனின் மூத்த அரசியல் செயலாளர் டத்தோ அன்புமணி பாலன் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button