PMX - Datuk Seri Anwar Ibrahim

மானிய இலக்குத் திட்டத்தின் பலன்கள் மக்களுக்குக் கிடைக்கும் ! டத்தோஸ்ரீ அன்வார் அறிக்கை

புத்ராஜெயா செப்.22- மானிய இலக்குத் திட்டம் மூலம் கிடைக்கும் வருவாய் மக்களுக்கு மீண்டும் சென்றடையும் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.நிதி அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் பிரதமர் அன்வார், டீசல் மானிய இலக்குத் திட்டம் மூலம் அரசாங்கம் SARA (Sumbangan Asas Rahmah) எனும் அடிப்படை ரஹ்மா உதவித்தொகையாக மக்களுக்கு RM100 வழங்க முடிந்தது எனக் குறிப்பிட்டார்.“SARA போன்ற திட்டங்கள் மூலம் மக்களுக்குப் பலன் வழங்க எங்களால் முடிந்தது. இந்த RM100 ஒரு சிறிய தொகையாக இருந்தாலும், நாட்டின் நிதிக்கு இது RM2 பில்லியன் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது, முன்பு டீசல் மானிய இலக்குத் திட்டத்தை அமல்படுத்தியதால்தான் சாத்தியமானது” என்று அவர் சொன்னார்.தற்போது, குடிமக்களல்லாதவர்களுக்கு மானிய விலை சற்று உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதி மீண்டும் மக்களுக்கு, குறிப்பாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சென்றடையும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் உள்ள Institut Pendidikan Guru Kampus Gaya, பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற உள்கட்டமைப்புகளை மீண்டும் சீரமைக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்.”இது ஒரு புதிய சுமையாகும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த நிதியிலிருந்து உதவுவதற்கு நாம் பயன்படுத்த வேண்டும். கல்வி, சுகாதாரம் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில்தான் எங்கள் கவனம் இன்னும் உள்ளது” என்று பிரதமர், பிரதமர் துறை (JPM) ஊழியர்களுடன் நடந்த மாதாந்திரக் கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தார்.துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் சாஹிட் ஹமிடி, பிரதமர் துறையின் அமைச்சர்கள் டத்தோஸ்ரீ அஸலினா ஒத்மான் சைத் மற்றும் டத்தோஸ்ரீ டாக்டர் சலிஹா முஸ்தஃபா, தலைமைச் செயலாளர் டான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பக்கர் மற்றும் பொதுச் சேவைத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ வான் அஹ்மத் டஹ்லான் அப்துல் அஜிஸ் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.நாட்டின் மேம்பாட்டிற்காக, மானிய இலக்குத் திட்டத்தை அமல்படுத்தும் அரசாங்கத்தின் தைரியமான நடவடிக்கையை மக்கள் நல்லெண்ணத்துடன் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.“ஆகவே, இதை ஏற்றுக்கொள்ளுங்கள். நாடு அமைதியாகவும், பொருளாதாரம் நிலைத்து நிற்கவும், அரசு ஊழியர்கள் சிறப்பாகச் செயல்படவும், மக்களுக்குப் பலன் கிடைக்கவும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நாம் நன்றி கூறுவோம்” என்று அவர் மேலும் கூறினார்.முன்னதாக, Budi Madani RON95 (Budi95) திட்டத்தின் கீழ், RON95 பெட்ரோல் விலை லிட்டருக்கு RM2.05-லிருந்து RM1.99 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும், இந்த விலை மாற்றம் செப்டம்பர் 30 முதல் அமலுக்கு வரும் என்றும் டத்தோஸ்ரீ அன்வார் அறிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button