
விளையாட்டு அரங்கை அதிர வைத்த ரினி தமிழ்ப்பள்ளியின் 54ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி
ஜொகூர் பாரு,ஏப்.19-
ரினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 54-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டி மலேசிய தொழில்நுட்ப பல்கலைகழகத்தின் அஸ்மான் ஹாஷிம் விளையாட்டு அரங்கில் புறப்பாடத் துணைத்தலைமையாசிரியை திருமதி.மு.சந்திரமோகினியின் வழிகாட்டலில் பொறுப்பாசிரியர்கள் திருமதி மா.ரேவதி மற்றும் திருமதி ந.மாரியம்மா அவர்களின் வழிநடத்தலில் மிகச் சிறப்பாக நடந்தேறியது.
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரின் அயராத முயற்சியினால் இவ்வாண்டும் வெளியரங்கில் சிறப்பாக நடந்தேறிய இப்போட்டி விளையாட்டினைக் கண்டு தாம் உளம் மகிழ்வதாகக் குறிப்பிட்ட பள்ளியின் தலைமையாசிரியை திருமதி.சு.தமிழ்ச்செல்வி மாணவர்கள் விளையாட்டிலும் கால் பதிக்க வேண்டும் என ஊக்கமூட்டினார்.

இந்நிகழ்வின் சிறப்புப் பிரமுகரான சுல்தானா ரொஹாயா அறக்கட்டளையின் தலைவர் டத்தோ சுகுமாறன் இராமன் அவர்கள் நம் மாணவர்கள் விளையாட்டுத்துறையில் மிளிர்வதோடு எதிர்காலத்தில் உலகளவில் நம் நாட்டைப் பிரதிநிதித்துப் போட்டியிடும் வல்லமை பெற்றிருக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.
மேலும், அவர் மாணவர்களின் கண்கவர் அணிவகுப்போடு தொடங்கிய இன்றைய நிகழ்வினைச் தீபச்சுடர் ஏற்றி அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து நன்கொடையும் வழங்கி சிறப்பித்தார்.
தொடர்ந்து பள்ளியின் இளஞ்சிட்டுகள் ஜிம்ராமா நடனத்தை வழங்கி நிகழ்விற்கு மெரூகூட்டிய வேளையில் பள்ளியின் இசைக்குழுவினரும் தங்களின் படைப்பினையும் வழங்கி பாராட்டுகளைப் பெற்றனர்,
ஒன்றாம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மாணவர்களுக்கு ஆண், பெண் என இரு பிரிவுகளில் ஓட்டப்போட்டிகள் நடைபெற்றன. 80மீ, 100மீ, 200மீ, 4×100மீ மற்றும் 4×200மீ போட்டிகளில் மாணவர்கள் சளைக்காது ஓடி தங்கள் விளையாட்டு இல்லங்களுக்கு மதிப்பெண்களை அள்ளிக் குவித்தனர். மேலும், பள்ளியில் நடைபெற்ற குழுப்போட்டிகள், ஈட்டி எறிதல் மற்றும் குண்டு வீசுதல் போட்டிகளிலும் மாணவர்கள் தங்களின் திறமைகளைக் காட்டி சிறப்பாக விளையாடினர்.
போட்டி விளையாட்டின் நிறைவு விழாவில் கலந்து கொண்ட ஜொகூர் மாநில பாலர் பள்ளிகள், ஆரம்பப்பள்ளிகளுக்கான உதவி இயக்குநரும் மற்றும் ஜொகூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளருமான திருவாளர் இரா.இரவிச்சந்திரன் மாணவர்களுக்கு வெற்றி கோப்பைகளை வழங்கி சிறப்பு செய்ததோடு இன்றைய நிகழ்வு சிறப்பாக நடந்தேறிட தம் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
பள்ளியின் 54-ஆம் ஆண்டு விளையாட்டுப் போட்டியின் வெற்றியாளராக நீல இல்லம் மகுடம் சூடிக் கொண்ட வேளையில் இல்ல அணிவகுப்பிற்கான முதலிடத்தை மஞ்சள் இல்லம் கைப்பற்றியது. மேலும், பள்ளிச் சீருடை இயக்கத்தின் அணிவகுப்பிற்கான முதல்நிலையைக் குருளையர் இயக்கத்தினர் பெற்றனர்.
இவ்வாண்டு பள்ளியின் விளையாட்டு வீரராகச் செல்வன் ஹவின்ராஜ் மற்றும் விளையாட்டு வீரங்கனையாகச் செல்வி சித்தேஸ்வரியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்



